கமல்ஹாசன் நடிப்பில் தக் லைஃப்… மே 8-ம் தேதி புதிய அப்டேட் ரெடி…
- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் இயக்குநர் மணிரத்னத்துடன் இணைந்து தக் லைஃப் எனும் புதிய படத்தில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட 34 ஆண்டுகள் கழித்து நாயகன் படத்திற்கு பிறகு மீண்டும் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணி இணைந்துள்ளது. இப்படத்தில் கமலுடன் இணைந்து த்ரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இத்திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தில் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன.

இத்திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு செர்பியாவில் நடந்தது. இதில் த்ரிஷா, கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இத்திரைப்படத்தில் கமல்ஹாசன் 3 வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.

மேலும், இத்திரைப்படத்தில் நடிக்க இருந்த ஜெயம்ரவி படத்திலிருந்து விலகுவதால், அவருக்கு பதில் அசோக் செல்வன் இணைவதாக கூறப்படுகிறது. மேலும், படத்தில் சிம்பு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் கமல்ஹாசன், சிம்பு, நாசர் மற்றும் அபிராமி ஆகியோர் இணைந்து நடித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்நிலையில் தக் லைஃப் படத்தின் புதிய அப்டேட் வரும் 8-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இது நடிகர் சிம்புவின் இன்ட்ரோ வீடியோவாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.