விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது ஆறு சீசன்கள் கடந்து ஏழாவது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 7, கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் தற்போது 90 நாட்களை நெருங்கியுள்ளது. இன்னும் சில நாட்களே இருக்கும் சமயத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் விசித்ரா, மாயா, பூர்ணிமா, ரவீனா ஆகியோர் தற்போது வரை போட்டியாளர்களாக நிலைத்திருக்கின்றனர். அதேசமயம் வைல்ட் கார்ட் மூலம் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த விஜய் வர்மா, தினேஷ், அர்ச்சனா ஆகியோரும் தற்போது விளையாடி வருகின்றனர். மேலும் இந்த வார எலிமினேஷனில் ரவீனா வெளியேறப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளது.
இந்நிலையில் இன்றைக்கான புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில் நடிகர் கமல்ஹாசன் விஜயகாந்த் குறித்து பேசி உள்ளார். அவர் பேசியதாவது, “பலரின் சோகத்தை இந்த மேடையில் பகிர்ந்து கொள்வதை என் கடமையாக நினைக்கிறேன். விஜயகாந்த்தை நினைத்து கண்ணீர் சிந்தி கொண்டிருப்பதை விட, அவரை நினைத்து புன்னகைப்பதற்கு நிறைய விஷயங்களை அவர் விட்டுச் சென்றுள்ளார். இது போல் நாமும் வாழ முடியுமா? என்பதை யோசித்தால் அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமும் நாம் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தமும் வரும்” என்று பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.