நடிகர் சூர்யா கடைசியாக எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் கமல்ஹாசன் நடிப்பிலும் வெளியான விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் சிறுத்தை சிவா இயக்கத்தில் 3D தொழில்நுட்பத்தில் மிக பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடனும் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தில் நடித்துள்ளார் சூர்யா. இதில் சூர்யாவுடன் இணைந்து பாபி தியோல், நட்டி நடராஜ், திஷா பதானி, யோகி பாபு, கோவை சரளா போன்றோர் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். இந்த படமானது ஏற்கனவே கொடைக்கானல் போன்ற இடங்களில் அடர்ந்த காட்டு பகுதிகளில் படமாக்கப்பட்டது. தற்போது படப்பிடிப்புகளும், டப்பிங் பணிகளும் நிறைவடைந்து போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இந்த படம் தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாக முழு வீச்சில் தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் அஜித்தின் விடாமுயற்சி, வெற்றிமாறனின் விடுதலை 2 போன்ற படங்களும் தீபாவளி ரேஸில் இணைய இருப்பதாக சமீப காலமாக செய்திகள் பரவி வரும் நிலையில் கங்குவா திரைப்படமும் அதே நாளில் வெளியாகும் என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. எனவே இது தொடர்பாக பிரபல தயாரிப்பாளரும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான தனஜெயன் சமீபத்தில் நடந்த பேட்டியில், “நாங்கள் கங்குவா படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டு வருகிறோம். விடாமுயற்சி, விடுதலை 2 போன்ற படங்களும் தீபாவளிக்கு ரிலீஸாக இருப்பதாக கேள்விப்பட்டோம். ஆனால் ஒரே நாளில் ஒரு சிறிய படமும் ஒரு பெரிய படமும் மோதும். ஆனால் இரண்டு பெரிய படங்கள் மோதுவதற்கு வாய்ப்பு இல்லை. அந்த பெரிய படம் கங்குவா படமாக இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. எனவே தீபாவளி ரிலீஸுக்கு கங்குவா தயாராகி வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.