இந்தியாவில் ஏராளமான ரசிகர்களால் கொண்டாடப்படும் கமல்ஹாசன் தற்போது தக் லைஃப் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் வரை இந்த ஜூன் 5ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக இருக்கிறது. அதற்கான முழு ஏற்பாடுகளும், ப்ரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவில் கமல்ஹாசன், தமிழ் மொழியில் இருந்து வந்தது தான் கன்னடம் என்று கூறியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கர்நாடகாவில் கமல்ஹாசனுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அதன்படி முதல்வர் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் கமல்ஹாசனுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் கர்நாடகாவில் தக் லைஃப் பட பேனர்கள் கிழிக்கப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமில்லாமல் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், அவர் மன்னிப்பு கேட்கவில்லை எனில் கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை தடை செய்வோம் எனவும் கர்நாடக அமைச்சர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக கமல்ஹாசன், “பல மொழி வரலாற்று அறிஞர்கள் சொன்னதை தான் நானும் சொன்னேன். தக் லைஃப் படத்திற்கு கர்நாடகாவில் எதிர்ப்புகள் தெரிவிக்கப்படுகிறது. என்னுடைய படத்தை மக்கள் பார்த்துக் கொள்வார்கள். அரசியல்வாதிகளுக்கு மொழி குறித்து பேச தகுதியில்லை. அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது” என்று தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், கமல்ஹாசனுக்கு ஆதரவு குரல் கொடுத்துள்ளார். அதன்படி அவர், “கமல்ஹாசனுக்கு கண்டனம் தெரிவிப்பவர்கள் கன்னட மொழிக்காக என்ன செய்திருக்கிறார்கள்? சர்ச்சை எழும்போது மட்டும் குரல் கொடுக்காமல் எப்பொழுதும் கன்னட மொழியை ஊக்குவிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.