கார்த்தியின் நடிப்பில் கடைசியாக வெளியான ஜப்பான் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. எனவே அடுத்ததாக கார்த்தி இழந்த தனது வெற்றியை எப்படி மீட்டெடுக்கப் போகிறார் என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். எனவே கார்த்தி ரசிகர்களுக்கு தீனி போடும் விதமாக மெய்யழகன் திரைப்படம் வந்துள்ளது. கார்த்தியின் 27 வது படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தினை 96 படத்தின் இயக்குனர் பிரேம்குமார் இயக்கி இருக்கிறார். சூர்யாவின் 2D நிறுவனம் படத்தினை தயாரித்துள்ளது. கோவிந்த் வசந்தா இதற்கு இசை அமைக்க மகேந்திரன் ராஜு இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீ திவ்யா, ராஜ்கிரண், தேவதர்ஷினி உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். கிராமத்துக் கதைக்களத்தில் எமோஷனல் கலந்த குடும்பப் பொழுது போக்கு படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது.
இப்படம் நாளை (செப்டம்பர் 27) திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதற்கு முன்பே சினிமா விமர்சகர்களுக்கும், ஊடகத்தினர்களுக்கும் இந்த படத்தின் பிரத்தியேக காட்சி போட்டு காட்டப்பட்டுள்ளது. அதன்படி இப்படத்தினை பார்த்த பலரும் சமூக வலைதள பக்கத்தில் படம் குறித்து தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதாவது, மெய்யழகன் படம் உணர்வுபூர்வமான படம் என்றும் பல உணர்வுபூர்வமான காட்சிகள் இந்த படத்தில் இடம்பெற்று இருப்பதாகவும் கமெண்ட் செய்துள்ளனர்.
மற்றொருவர், மெய்யழகன் திரைப்படம் நினைத்ததை விட அருமையாக வந்திருப்பதாகவும், படத்தின் பெரும்பாலான காட்சிகள் நம் வாழ்க்கையுடன் கனெக்ட் செய்யும் விதமாக அமைந்துள்ளதாகவும் கார்த்தி மற்றும் அரவிந்த்சாமி ஆகிய இருவரும் மிகவும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு படம் குறித்து தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். இதன் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறி உள்ளது.