கொட்டுக்காளி படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நடிகர் சூரி ஆரம்பத்தில் காமெடியனாக பல வெற்றி படங்களில் நடித்திருக்கும் நிலையில் கடந்தாண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படத்தில் ஹீரோவாக களமிறங்கினார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் சூரி. அதன்படி கடந்த மே மாதம் வெளியான கருடன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு சூரி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கொட்டுக்காளி. இதில் சூரியுடன் இணைந்து அன்னா பென் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தினை சிவகார்த்திகேயன் தனது எஸ் கே ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்திருந்தார். இதனை கூழாங்கல் படத்தின் இயக்குனர் பி எஸ் வினோத் ராஜ் இயக்கியிருந்தார். இந்த படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி திரைக்கு வந்தது. அதற்கு முன்னதாகவே பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அதைத்தொடர்ந்து ரிலீஸான பின்னரும் பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்றது. இந்நிலையில் இந்த படமானது வருகின்ற செப்டம்பர் 20ஆம் தேதி சிம்பிளி சௌத் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.