KPY பாலா வாயில்லா ஜீவன்களுக்கு உதவி வருகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் பாலா. அதன் பின்னர் இவர், KPY பாலா என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார். அடுத்தது இவர், ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியிலும் கோமாளியாக அசத்தினார். இது தவிர வெள்ளித்திரையிலும் சில படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தற்போது இவர் ஹீரோவாக புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார். அதன்படி காந்தி கண்ணாடி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படம் நாளை (செப்டம்பர் 5) திரைக்கு வர இருக்கிறது. இயக்குனர் ஷெரிப் இந்த படத்தை இயக்க ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் ஏழை எளியவர்களுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்து வருகிறார் பாலா. அந்த வகையில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து ‘மாற்றம்’ என்ற அமைப்பின் மூலம் பல்வேறு உதவிகளை செய்து பாராட்டுகளைப் பெற்று வருகிறார். இந்நிலையில் பாலா குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது மனிதர்களுக்கு மட்டுமில்லாமல் வாயில்லா ஜீவன்களுக்கும் உதவி வருகிறார் பாலா. திருவெற்றியூர் அருகிலுள்ள ஒரு இடத்தில் 150 தெருநாய்களை தத்தெடுத்து அவற்றிற்கு உதவி செய்து வருகிறார். அந்த பகுதிக்கு சென்று நாய்களுக்கு உணவு வழங்கி அவற்றிற்கான மருத்துவ செலவுகளையும் கவனித்து வருகிறார். இவ்வாறு மாதாமாதம் அந்த நாய்களுக்கு உதவி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பாலாவின் இந்த செயலுக்கு பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.