கே.எஸ். ரவிக்குமார், மனோஜ் பாரதிராஜாவின் மறைவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை எனக் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் தாஜ்மஹால் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான மனோஜ் பாரதிராஜா, கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சமுத்திரம் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். காதல், காமெடி, செண்டிமெண்ட் ஆகியவை அனைத்தும் கலந்த குடும்பப் படமாக வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இது தவிர மனோஜ், வருஷமெல்லாம் வசந்தம் போன்ற சில படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார். அடுத்தது இவர் மார்கழி திங்கள் என்ற திரைப்படத்தையும் இயக்கியிருந்தார். இந்நிலையில் இவர் நேற்று (மார்ச் 26) மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அது மட்டும் இல்லாமல் மனோஜின் தந்தை பாரதிராஜா, மனோஜின் மனைவி, மகள்கள் ஆகியோர் கதறி அழும் காட்சிகள் மனதை உலுக்குகிறது. மேலும் பாரதிராஜாவின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மனோஜின் உடலுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த வகையில் இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ். ரவிக்குமார், “அகால மரணம் என்பதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. நேற்று இரவிலிருந்து மனோஜ், சமுத்திரம் படத்தில் நடித்த காட்சிகள் தான் வந்து போகிறது. எங்கு பார்த்தாலும் இருவரும் பேசிக் கொள்வோம். நெருக்கமான ஒரு தோழர் மனோஜ். அவர் 48 வயதில் இறந்து விட்டார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவருடைய அப்பா பாரதிராஜாவை பார்க்க முடியவில்லை. ஏற்கனவே அவருக்கு வயதாகி விட்டதால் அவரால் சரியாக நடக்கக்கூட முடியாது. இந்த நிலையில் அவர் மிகவும் உடைந்து போயிருக்கிறார். அவரால் அழக் கூட முடியவில்லை. மனோஜின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்” என்று பேசியுள்ளார்.