லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்த நடிகர் விஷால், மொத்தம் 150-க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
‘விஷால் பிலிம் பேக்டரி’ படத் தயாரிப்பு நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் நடிகர் விஷால் பெற்ற ரூ.21 கோடியே 29 லட்சம் கடனை, லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்டு, செலுத்தியது. இந்த தொகையை விஷால் செலுத்தாததை அடுத்து லைகா நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிபதி பி.டி. ஆஷா முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் விஷாலிடம், லைகா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.ராகாவாச்சாரி, இரண்டாவது நாளாக குறுக்கு விசாரணையை செய்தார்.
அப்போது, சினிமா துறையில், கடன்களுக்கு எவ்வளவு சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது? என கேள்வி வி.ராகாவாச்சாரி எழுப்பினார். இதற்கு மாதம் ஒரு சதவீதத்தில் இருந்து ஆறு சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுவதாக விஷால் பதிலளித்தார். மேலும், லைகாவிற்கு எதிராக விஷால் தொடர்ந்த ஜி.எஸ்.டி. வழக்கு உள்ளிட்டவை தொடர்பாகவும் கேள்விகள் எழுப்பப்பட்டன. விஷாலிடம் 2 நாட்கள் நடத்தப்பட்ட குறுக்கு விசாரணையில், மொத்தம் 150-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றுக்கு சாட்சி கூண்டில் நின்றவாறு சுமார் இரண்டரை மணி நேரம் விஷால் பதிலளித்துள்ளார்.
குறுக்கு விசாரணை முடிவடைந்ததை அடுத்து, வழக்கறிஞர்கள் வாதத்துக்காக வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் மாதம் 9ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.