விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர். இருப்பினும் சமீப காலமாக இவர் ஹீரோவாக நடிக்கும் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதே சமயம் இவர் வில்லனாக களமிறங்கும் படங்கள் பல வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது. அந்த வகையில் ஷாருக்கான் உடன் இணைந்து விஜய் சேதுபதி நடித்த ஜவான் திரைப்படம் சுமார் 1100 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து ட்ரெயின், ஏஸ் , விடுதலை 2, காந்தி டாக்கீஸ் போன்ற படங்களையும் விண்ட் என்ற வெப் தொடரையும் கைவசம் வைத்துள்ளார் விஜய் சேதுபதி. இதற்கிடையில் இவர், விதார்த் நடிப்பில் வெளியான குரங்கு பொம்மை படத்தின் இயக்குனர் நித்திலன் சாமிநாதனுடன் கைகோர்த்து மகாராஜா எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதி தவிர பாரதிராஜா, மம்தா மோகன் தாஸ், நட்டி நட்ராஜ், அனுராக் காஷ்யப், அபிராமி போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இருந்த இந்த படம் கடந்த ஜூன் 14 அன்று உலகம் முழுவதும் திரையிடப்பட்டது.
வெளியான முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வசூலையும் வாரி குவித்து வருகிறது. அந்த வகையில் மகாராஜா திரைப்படம் 6 நாட்களில் 55 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 2024 ஆம் ஆண்டில் வெளியான தமிழ் திரைப்படங்களில் மிகக் குறுகிய நாட்களில் அதிக வசூலை பெற்ற படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. எனவே இனிவரும் நாட்களிலும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
- Advertisement -