நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நிலையில் இவர் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்து பெயர் பெற்றுள்ளார். அதே சமயம் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிபடங்களிலும் நடித்து கலக்கி வருகிறார். அந்த வகையில் ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி மகாராஜா எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை கடந்த 2017-ல் விதார்த் நடிப்பில் வெளியான குரங்கு பொம்மை படத்தின் இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கியிருந்தார். பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. வித்தியாசமான கதைக்களத்தில் ஹீரோவை விட திரைக்கதைக்கு முக்கியத்துவம் தந்து அருமையான படத்தை கொடுத்திருந்தார் நித்திலன் சாமிநாதன். இந்த படம் வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அதேசமயம் ரஜினி, விஜய் உள்ளிட்ட பலரும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான பின்பும் ட்ரெண்டிங் நம்பர் 1 இல் இருந்து வருகிறது. அதாவது 2024 இல் ரசிகர்களால் ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட இந்திய படம் என்ற பெருமையை தட்டி தூக்கியுள்ளது மகாராஜா திரைப்படம். இவ்வாறு பெரிய அளவில் பேசப்படும் மகாராஜா திரைப்படத்தினால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.