நடிகை மேகா ஆகாஷ் தனது திருமண விழாவிற்கு ரஜினிகாந்தை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார்.
நடிகை மேகா ஆகாஷ் கடந்த 2019 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பிலும் கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்திலும் வெளியான பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். தொடர்ந்து வந்தா ராஜாவா தான் வருவேன், யாதும் ஊரே யாவரும் கேளிர், என்னை நோக்கி பாயும் தோட்டா என பல படங்களில் சிம்பு, தனுஷ், சந்தானம், அசோக் செல்வன் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். கடைசியாக கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி விஜய் மில்டன் மற்றும் விஜய் ஆண்டனி கூட்டணியில் வெளியான மழை பிடிக்காத மனிதன் எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மேகா ஆகாஷ். இதற்கிடையில் நடிகை மேகா ஆகாஷ், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசரின் மகன் சாய் விஷ்ணு என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார்.
சமீபத்தில் தான் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இவர்களது திருமணம் இரு வீட்டாரின் சம்பந்தத்துடன் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்காக மேகா ஆகாஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து தனது திருமண விழாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.