புஷ்பா 2 படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அல்லு அர்ஜுன் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் திரைப்படம் தான் புஷ்பா 2. புஷ்பா தி ரூல் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை சுகுமார் இயக்கி இருக்கிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு சுகுமார் மற்றும் அல்லு அர்ஜுன் கூட்டணியில் வெளியான புஷ்பா திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் மெகா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து பிரம்மாண்ட வெற்றி பெற்றது. அதேபோல் அல்லு அர்ஜுன் இந்த படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் வென்றுள்ளார். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமான புஷ்பா 2 – தி ரூல் எனும் திரைப்படம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையிலும் உருவாகி வருகிறது. ஏற்கனவே படத்தின் டீசரும் அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி கவனம் பெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் வருகின்ற நவம்பர் 17ஆம் தேதி மாலை 6.03 மணி அளவில் வெளியாகும் என படக் குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் புஷ்பா 2 திரைப்படமானது வருகின்ற டிசம்பர் மாதம் 5ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக முழு வீச்சில் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.