தீபாவளிக்கு தியேட்டர்களில் வெளியாகும் திரைப்படங்கள்.
2024 அக்டோபர் 31 தீபாவளி தினத்தன்று நான்கு திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றன.

அமரன்
சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கும் திரைப்படம் தான் அமரன். இதில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சாய்பல்லவி நடித்துள்ளார்.
இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படம் நாளை தீபாவளி தினத்தன்று திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது.
லக்கி பாஸ்கர்
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி இருக்கும் லக்கி பாஸ்கர் திரைப்படம் நாளை (அக்டோபர் 31) தீபாவளி தினத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தினை தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி படத்தின் இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கியுள்ளார். இதில் துல்கர் சல்மான், மீனாட்சி சௌத்ரி, ராம்கி உள்ளிட்டோர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதர்
சிவா மனசுல சக்தி படத்தின் இயக்குனர் எம். ராஜேஷ் தற்போது இயக்கியிருக்கும் திரைப்படம் தான் பிரதர். இந்த படத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா சாவ்லா, சரண்யா பொன்வண்ணன், நட்டி நட்ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். அக்கா- தம்பி உறவை மையமாக வைத்து குடும்பப் பொழுது போக்கு படமாக உருவாகியிருக்கும் இந்த படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
ப்ளடி பெக்கர்
கடந்த ஆண்டு வெளியான ஜெயிலர் படத்தின் மூலம் இந்தியாவில் பிரபலமான நெல்சன் தயாரிப்பில் ப்ளடி பெக்கர் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் கவின் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் கவின் யாசகராக நடித்திருக்கும் நிலையில் இவருடைய வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதன் அடிப்படையில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் டார்க் காமெடி கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை நெல்சனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சிவபாலன் இயக்கியிருக்கிறார். இந்த படம் நாளை (அக்டோபர் 31) தீபாவளி தினத்தன்று திரையரங்குகளில் வெளியாகிறது.