இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த 2012 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதை தொடர்ந்து 2015 விஜய் சேதுபதி, நயன்தாரா கூட்டணியில் நானும் ரௌடி தான் திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் விக்னேஷ் சிவனுக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்த படத்தின் படப்பிடிப்பில் இருந்து தான் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலித்து வந்தனர். தற்பொழுது இருவருக்கும் திருமணம் முடிந்து இரட்டை ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். இதற்கிடையில் விக்னேஷ் சிவன், மீண்டும் விஜய் சேதுபதி, நயன்தாராவை வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்திற்கு பிறகு கடந்த ஒரு வருடங்களாக விக்னேஷ் சிவன் எந்த படத்தையும் இயக்கவில்லை. அஜித்தின் 62 வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அந்த படத்தை மகிழ்திருமேனி இயக்கி வருகிறார். இந்நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கோமாளி, லவ் டுடே படத்தின் மூலம் பிரபலமான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், விக்னேஷ் சிவன் புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கப் போவதாக அறிவித்தது. ஆனால் தற்போது செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் இந்த டிசம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இதன் புதிய அப்டேட் என்னவென்றால், விக்னேஷ் சிவன் இயக்க இருக்கும் இந்த புதிய படத்தில் நடிகை நயன்தாரா நடிக்க இருப்பதாகவும், பிரதீப் ரங்கநாதனுக்கு அக்காவாக நடிக்க இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -