பிரபல நடிகர் எஸ்.வி. சேகருக்கு, சிறப்பு நீதிமன்றம் ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
பிரபல நடிகரான எஸ் வி சேகர், பூவே பூச்சூடவா, சகாதேவன் மகாதேவன், ஜீன்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் நகைச்சுவைக்காக பல விருதுகளையும் வென்றுள்ளார். தற்போது இவர் பாஜக உறுப்பினராகவும் வலம் வருகிறார். இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு எஸ்.வி. சேகர், முகநூலில் பெண் பத்திரிகையாளர்களை விமர்சித்து பதிவினை வெளியிட்டு இருந்தார். இது சம்பந்தமாக எஸ்வி சேகர் மீது நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் மெட்ராஸ் உயர் நீதிமன்றம் எஸ்.வி சேகருக்கு முன்ஜாமின் வழங்க மறுத்தது. பின்னர் அதே ஆண்டில் அவருக்கு ஜாமினும் வழங்கப்பட்டது.
மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் எம்எல்ஏ, எம்பிக்கள் மீதான வழக்குகளை விசாரணை செய்யும் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நீண்ட நாட்களாக இந்த வழக்கு நிலுவையில் இருந்தது. அது மட்டும் இல்லாமல் எஸ்.வி. சேகரை விடுவிக்க சிறப்பு நீதிமன்றம் மறுப்பும் தெரிவித்தது. இந்நிலையில் இந்த வழக்கு சம்பந்தமான தீர்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது. அதன்படி நடிகர் எஸ்.வி. சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும் ரூ.15000 அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.