இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருப்பவர் அஜித் குமார். இவருடைய 54 வது பிறந்தநாள் இன்று (மே 1). இவர் சினிமாவில் தனக்கென தனி பாதையை உருவாக்கி ஒரு சிறந்த நடிகராக மட்டுமல்லாமல் ரேஸராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் கார் பந்தயத்திலும் தன்னுடைய அசைக்க முடியாத தனிச்சிறப்பை காட்டி வருகிறார் அஜித். கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியான அமராவதி படத்தின் மூலம் அறிமுகமான அஜித், ஆரம்பத்தில் சில தடைகளை சந்தித்தாலும் அதன் பிறகு ஆசை, வாலி, வில்லன், வீரம், விஸ்வாசம் என ஏகப்பட்ட வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அதிலும் பில்லா படத்தில் இவருடைய ஸ்டைல் இன்றுவரையிலும் பெரிய அளவில் பேசப்படுகிறது.
மேலும் நீண்ட இடைவெளிகள் கழித்து சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி படத்திலும் மாஸாகவும், ஸ்டைலாகவும், கலகலப்பாகவும் நடித்திருந்தார். அதாவது சில சமயங்களில் பல தோல்விகள் வந்தாலும் தோல்வி என்றால் முடிவில்லை என்பதற்கு ஏற்ப தன்னுடைய விடாமுயற்சியால் மீண்டும் உயரத்தை தொட்டுள்ளார். திரைத்துறையில் எப்படி பிசியாக பணியாற்றி வருகிறாரோ அதேபோல் கார் பந்தயங்களிலும் கவனம் செலுத்தி இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். இது தவிர வெளியில் தெரியாத பல சமூக சேவைகளையும் செய்து வருகிறார் அஜித்.
இந்நிலையில் தான் சமீபத்தில் நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது ஒட்டுமொத்த தமிழர்களுமே பெருமைப்படும் நிகழ்வாக அமைந்தது. இவ்வாறு இந்த ஆண்டு தொடங்கியது முதல் தொடர் வெற்றிகளை கண்டு வரும் அஜித்தின் பிறந்தநாளான இன்று ரசிகர்களும், திரைப் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் நாமும் வாழ்த்து தெரிவித்து மகிழ்வோம்.
- Advertisement -