‘பரிதாபங்கள்’ டிராவிட் செல்வம் நடித்த ட்ரோன்ஸ் திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது.
காமெடி திரைப்படங்கள் என்றாலே பெரும்பாலும் அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் ஹாரர் காமெடி படங்களுக்கு எனத் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. குறிப்பாக, சந்தானத்தின் தில்லுக்கு துட்டு 1,2,3 மற்றும் சதீஷின் கான்ஜூரிங் கண்ணப்பன் ஆகிய படங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருந்த நிலையில், அதே பாணியில் வெளியாகும் படங்களை குடும்பத்துடன் திரையரங்குகளுக்குச் சென்று ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். அந்த வகையில், குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கக்கூடிய ஒரு ஜாலியான எண்டர்டெயினராக உருவாகி, கடந்த அக்டோபர் மாதம் 16-ஆம் தேதி வெளியான ஃபேண்டஸி ஹாரர் காமெடி திரைப்படம்தான் ‘ட்ரோன்ஸ்’. பரிதாபங்கள் புகழ் டிராவிட் செல்வம் கதாநாயகனாக நடித்திருந்த இப்படத்தை இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்க, ஜி.எம். மோர்கன் தயாரித்திருந்தார்.
இப்படத்தில் டிராவிட் செல்வத்துடன் இணைந்து சித்தி இத்னானி, தேவதர்ஷினி, குரேஷி, சசி செல்வராஜ், அஞ்சலி நாயர் மற்றும் பலர் நடித்திருந்தனர். ஹரி எஸ்.ஆர். இசையமைத்திருந்த இப்படத்திற்கு ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஃபேண்டஸி ஹாரர் காமெடி ஜானரில் உருவான இப்படத்தில் காமெடி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருந்தது. எனவே இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் ‘ட்ரோன்ஸ்’ திரைப்படம் நாளை (நவம்பர் 20) முதல் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் இப்படம் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
