கூலி படத்தின் திரைவிமர்சனம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இன்று (ஆகஸ்ட் 14) மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் தான் கூலி. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், சௌபின் சாகிர், உபேந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைத்திருக்கிறார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தில் நடிகர் ரஜினி ஹாஸ்டல் வார்டனாக நடித்துள்ளார். அவருடைய நெருங்கிய நண்பனாக சத்யராஜும், சத்யராஜின் மகளாக ஸ்ருதிஹாசனும் நடித்துள்ளனர். நாகார்ஜுனா வில்லனாகவும் அவருடைய வலது கையாக சௌபின் சாஹிரும் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் முழு விமர்சனத்தை பார்க்கலாம். விசாகப்பட்டினம் துறைமுகத்தில் தங்க கடத்தலில் ஈடுபட்டு வரும் நாகார்ஜுனா, தன்னுடன் இருந்தே போலீசுக்கு தகவல் சொல்லும் உளவாளிகளை கொன்று குவிக்கிறார். ஆனால் அதே வேளையில் அந்த உடல்களை அப்புறப்படுத்துவதில் வில்லன் கும்பலுக்கு சிக்கல் ஏற்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம், சத்யராஜின் இறப்பில் மர்மம் இருப்பதை கண்டுபிடிக்கும் ரஜினி, ஸ்ருதிஹாசன் உடன் இணைந்து சத்யராஜை கொன்றவர்களை தேடுகிறார். அப்பொழுது ரஜினி, கூலி ஆளாக நாகார்ஜுனா கூட்டத்தில் சேருகிறார். ஒரு கட்டத்தில் சத்யராஜை, கொன்றது நாகார்ஜுனா தான் என்பது ரஜினிக்கு தெரிய வர அதன் பின் ரஜினி, நாகார்ஜுனாவை பழிவாங்கினாரா? என்பதுதான் படத்தின் மீதி கதை.
லோகேஷ் கனகராஜ் டைட்டில் கார்டிலேயே ரஜினி ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறார். மேலும் நடிகர் ரஜினி வழக்கம்போல் படத்தை தோளில் தாங்கி பிடித்துள்ளார். ஆட்டம், பாட்டம் என கலகலப்பான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்து இழுக்கிறார் ரஜினி. அவருடைய ஸ்டைலை பற்றி சொல்லவே வேண்டாம் அனைவரையும் அசர வைக்கிறது. இது தவிர ரஜினியின் விண்டேஜ் லுக் இடம்பெறும் காட்சியில் தியேட்டரில் விசில் சத்தம் பறக்கிறது. நாகார்ஜுனா வில்லத்தனத்தில் மிரட்டி உள்ளார். சௌபின் சாஹிரின் நடிப்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. ஸ்ருதிஹாசன் தனது உணர்வுபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி கைத்தட்டல் பெறுகிறார். சத்யராஜ், அமீர்கான், உபேந்திரா ஆகியோரின் வருகை அருமை. பூஜா ஹெக்டேவின் கவர்ச்சி நடனம் ரசிகர்களை கவர்ந்திழுக்கிறது. அடுத்தது அனிருத்தின் இசை திரையரங்கை அதிர வைக்கிறது.
கிரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளன. இந்த படம் சாதாரண பழிவாங்கும் கதையாக இருந்தாலும் பரபரப்பான, விறுவிறுப்பான காட்சிகளின் மூலம் அதை மாஸாக கொடுத்திருக்கிறார் லோகேஷ். மொத்தத்தில் இது ஒரு பக்கா கமர்சியல் படமாக இருந்தாலும் திரைக்கதை இன்னும் வலுவாக அமைக்கப்பட்டிருக்கலாம். இருப்பினும் ரஜினி ரசிகர்கள் கொண்டாடும் படம் தான் கூலி.