ரஜினிக்கு வழங்கப்பட்ட இலங்கை பெருந்தோட்ட சமூக நினைவு முத்திரை
- Advertisement -

வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்த ரஜினிகாந்த் ஓய்வெடுக்க அபுதாபி சென்றிருந்தார். அங்கிருந்து சென்னை திரும்பிய ரஜினி மீண்டும் ஆன்மிக பயணத்திற்கு புறப்பட்டார். ஆண்டுதோறும் அவர் ஆன்மிக பயணமாக இமயமலை செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். ஒரு வாரகால ஆன்மிக பயணத்தை முடித்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்.

தொடர்ந்து அவர் கூலி படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று கூறப்பட்டது. ஆனால், எதிர்பாராத காரணங்களால் கூலி படப்பிடிப்பு ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போனது. இதனிடையே, நாடாளுமன்ற தேர்தலில் வென்று மீண்டும் அரியணை ஏறிய பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்து கலந்து கொண்டார். தொடர்ந்து ஆந்திர மாநிலத்தின் முதல்வராக பதவியேற்ற சந்திர பாபு நாயுடுவின் நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டு வாழ்த்தினார்.

இந்நிலையில், நடிகர் ரஜினிக்கு இலங்கை பெருந்தோட்ட சமூகத்தின் 200-ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி, உருவாக்கப்பட்ட நினைவு முத்திரை வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து இலங்கை சென்ற தமிழர்கள்,, 200 ஆண்டுகளுக்கும் மேலாக தேயிலை காடுகளில் வேலை செய்து வருகின்றனர். அவர்களுக்காக உருவாக்கப்பட்டது தான் இந்த அமைப்பாகும். இந்த அமைப்பு தற்போது 200 ஆண்டுகளை நிறைவு செய்ததால், அதற்கான நினைவு முத்திரையின் முதல் பிரதியை ரஜினியிடம் அதிகாரிகள் வழங்கினர்.