ஜீ தமிழ் சரிகமப சீனியர்ஸ் மூலம் பிரபலமான பாடகி ‘ராக்ஸ்டார் ரமணியம்மாள்’ வயது மூப்பு காரணமாக இன்று காலமானார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சி சரிகமப சீனியர்ஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான, பின்னணி பாடகி ரமணியம்மாள் (69) வயது மூப்பு காரணமாக காலமானார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சரிகமப இசை நிகழ்ச்சியில் ரமணியம்மா வெற்றி பெற்று மக்களின் மனதில் இடம் பெற்றார்.


ரமணியம்மாள் 43 ஆண்டு காலமாக வீட்டு வேலைகள் செய்து, மிகுந்த அவதிப்பட்டு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்த வேளையில், அவரின் பாடல் பாடும் திறனை அறிந்த சிலர் ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சி நடத்தும் ‘சரிகமப’ நிகழ்ச்சியில் சேர்த்துவிட்டனர்.

அதில் தொடர்ந்து இவர், இரண்டாமிடத்தைப் பெற்று, அதற்காக பரிசும் பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். அவரை ராக்ஸ்டார் ரமணியம்மாள் என அனைவரும் அன்போடு அழைத்து வந்தனர்.
இவர் ஜூங்கா, சண்டக்கோழி 2, காப்பான், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா ஆகிய படங்களில் பல பாடல்கள் பாடியுள்ளார்.

இவருடைய திடீர் மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.


