ரவி – ஆர்த்தி வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு நடிகர் ரவியும் – ஆர்த்தியும் திருமணம் செய்து கொண்டனர். காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இருவரும் கிட்டத்தட்ட 15 வருடங்கள் வாழ்ந்து வந்த நிலையில் நடிகர் ரவி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தார். ஆனால் ஆர்த்தி, ரவியுடன் சேர்ந்து வாழ இருப்பதாக கூறினார். இருப்பினும் ரவி – ஆர்த்தி விவகாரம் கோர்ட் வரை சென்றது. அதன்படி இருவரின் விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் இருவரையும் சமரச பேச்சுவார்த்தை நடத்தும்படி நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் அதில் உடன்பாடு எட்டப்படவில்லை என்பதால் ஆர்த்தி, ரவியிடமிருந்து மாதாமாதம் ரூ. 40 லட்சம் ஜீவனாம்சம் வேண்டுமென மனு தாக்கல் செய்திருந்தார். இதனை அடுத்து நீதிபதி இதற்கு பதில் அளிக்கும்படி ரவிக்கு உத்தரவிட்டதோடு, இந்த வழக்கை ஜூன் மாதத்திற்கு தள்ளிவைத்தார். இதற்கிடையில் திருமண நிகழ்வில் ரவி, பாடகி கெனிஷாவுடன் கைகோர்த்து வந்த விவகாரம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இதற்கு ரவியின் மனைவி ஆர்த்தி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அதை தொடர்ந்து ரவி பதில் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதேசமயம் ஆர்த்தியின் தாயார் சுஜாதா விஜயகுமாரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த நிலையில் சமீபத்தில் ஆர்த்தியும் மீண்டும் ஒரு ஐந்து பக்க அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் ரவி, ஆர்த்தியும், அவரது தாயார் தன்னை பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை வெளியிட தடை செய்யக்கோரி மனு தாக்கல் செய்திருந்தார். எனவே ரவியின் கோரிக்கையை ஏற்று ரவி – ஆர்த்தி இருவரும் தங்களின் விவாகரத்து விவகாரம் குறித்து பொதுவெளியில் அறிக்கை வெளியிட தடை விதித்ததோடு, ரவி- ஆர்த்தி விவகாரம் குறித்து இனி யாரும் சமூக வலைதளங்களில் செய்திகளை வெளியிடவோ, விவாதிக்கவோ கூடாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.