நடிகர் சூரி, அஜித் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகர் சூரி தமிழ் சினிமாவில் ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். அந்த படத்தில் இருந்து சூரியை பலரும் பரோட்டா சூரி என்று அழைத்து வந்தனர். அதே சமயம் சூர்யா, சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி தனக்கென தனி ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார் சூரி. மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘விடுதலை பாகம் 1’ படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமாகி தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார். இவர் தற்போது அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் ‘மண்டாடி’ போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் நடிகர் சூரி, நடிகர் அஜித்தை நேரில் சந்தித்துள்ளார். எனவே இது தொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், “அவரைப் பார்த்த நொடியிலேயே புரிந்தது. உண்மையான வெற்றி உருவாக்கப்படுவதில்லை. அது தினமும் உழைப்பாலும், மன வலிமையாலும் சம்பாதிக்கப்படுவது. அவருடன் நடந்த அந்த உரையாடல் அமைதியாக இருந்தாலும் ஆழமான அர்த்தம் கொண்டது” என்று குறிப்பிட்டு அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படமும் சூரியின் பதிவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.


