குட் பேட் அக்லி படம் குறித்து சுப்ரீம் சுந்தர் பேசி உள்ளார்.
துணிவு திரைப்படத்திற்கு பிறகு அஜித் நடிப்பில் விடாமுயற்சி எனும் திரைப்படம் உருவாகி வந்தது. மகிழ் திருமேனியின் இயக்கத்திலும் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பிலும் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ நிறைவடைந்து விட்டது. இன்னும் ஒரு சில காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது. அதே சமயம் நடிகர் அஜித் தனது 63வது திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னரே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அஜித்தின் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களிலுமே ஸ்டண்ட் மாஸ்டராக சுப்ரீம் சுந்தர்தான் பணியாற்றி வருகிறார். இவர் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்கள் குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, ” விடாமுயற்சி படமானது லொகேஷன் காரணமாக தாமதமாகி வருகிறது. விடாமுயற்சி படத்தைப் பொறுத்தவரையில் இயக்குனர் மகிழ் திருமேனி அஜித்தை புதிய வடிவில் செதுக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தினை ஆக்ஷன் காட்சியாக மாற்றியுள்ளோம்.
அதேபோல் குட் பேட் அக்லி படமானது அஜித்தின் கேரியரில் ஒரு அதிரடி கமர்சியல் படமாக இருக்கும். பில்லா படத்திற்கு பிறகு இந்த படத்தில் தான் ஒரு மாறுபட்ட ஸ்டைலிஷான தோற்றத்தில் நடித்து வருகிறார் அஜித். விடாமுயற்சியை விட குட் பேட் அக்லி படத்தில் ஆக்சன் காட்சிகள் அதிகமாக இருக்கும் ” என்று தெரிவித்துள்ளார்.