தேர்தல் விதிமீறல் வழக்கிலிருந்து நடிகர் அல்லு அர்ஜுனை ஆந்திர உயர்நீதிமன்றம் விடுவித்துள்ளது.
நடிகர் அல்லு அர்ஜுன் தெலுங்கு திரை உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார். இவருக்கு தமிழிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் புஷ்பா 2 திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இதற்கு புஷ்பா முதல் பாகத்தில் பிரம்மாண்ட வெற்றி தான் காரணம். அந்த வகையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் மிகப்பிரமாண்டமாக உருவாகி வரும் புஷ்பா 2 என்று சொல்லப்படும் புஷ்பா தி ரூல் திரைப்படம் வருகின்ற டிசம்பர் மாதம் 5ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் அல்லு அர்ஜுன், தேர்தல் விதிமீறல் வழக்கு ஒன்றில் சிக்கி இருந்தார். அதாவது ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலின் போது நடிகர் அல்லு அர்ஜுன் YSR வேட்பாளர் ஷில்பா ரவி சந்திர கிஷோருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நந்தியாலாவில் உள்ள தன்னுடைய ரசிகர்களை சந்தித்தார். இதனால் அல்லு அர்ஜுன் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு தொடரப்பட்டது. அதைத்தொடர்ந்து அல்லு அர்ஜுன், தனது நெருங்கிய நண்பர் கிஷோர், நந்தியாலயா தொகுதியில் போட்டுவிட்டதால் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க அவரது வீட்டிற்கு தான் சென்றதாகவும், அதனை அறிந்த ரசிகர்கள் அங்கு திரண்டு வந்து விட்டதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் நான் தேர்தல் விதியை மீறவில்லை. எனவே எனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யும்படி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் ஆந்திர உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் இருந்து அல்லு அர்ஜுனை விடுவித்துள்ளது. இந்த தகவல் அல்லு அர்ஜுன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.