நடிகர் சூர்யா, லக்கி பாஸ்கர் பட இயக்குனருடன் கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர் வெங்கி அட்லூரி. இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்று கிட்டத்தட்ட ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து இவர், துல்கர் சல்மான் நடிப்பில் லக்கி பாஸ்கர் எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் கடந்த தீபாவளி தினத்தன்று உலகம் முழுவதும் வெளியான நிலையில் இப்படமும் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இந்நிலையில் வெங்கி அட்லூரி, சூர்யா நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்தினை லக்கி பாஸ்கர் படத்தை தயாரித்த சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அடுத்தது இந்த படமானது மாருதி கார்களின் புகழ்பெற்ற 796CC இன்ஜின் எப்படி உருவாக்கப்பட்டது என்பது தொடர்பான கதைக்களத்தில் உருவாகும் என தெரியவந்துள்ளது. எனவே இந்த படத்திற்கு 796CC என்று தலைப்பு வைக்க வாய்ப்புள்ளதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.
நடிகர் சூர்யா தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் பெயரிடப்படாத புதிய படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.