திரை பிரபலங்கள் பலர் சினிமாவில் ஹீரோவாக நடித்தது மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக வாழ்ந்து வருகிறார்கள். அதாவது கடந்த ஆண்டு சென்னையில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல நடிகர்கள் நிதி உதவி வழங்குவது பாதிக்கப்பட்டோருக்கு அத்தியாவசிய பொருட்களை வாங்கித் தருவது என பல உதவிகளை செய்தார்கள். அதுபோல தற்போது கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உதவ முன்வந்துள்ளார்கள்.
கேரள மாநிலம் வயநாடு போன்ற பகுதிகளில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு இந்தியாவையே உலுக்கி எடுத்துள்ளது. பொதுமக்கள் பலரும் மண்ணுக்குள் சிக்கிக்கொண்ட நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்புத் துறையினர் போன்றோர் இரவு பகல் பாராமல் அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்திருக்கும் நிலையில் ஏராளமான பொதுமக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது மூன்றாவது நாளாகவும் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடிகர் விக்ரம் மீட்பு பணிக்காக சுமார் 20 லட்சம் ரூபாய் வரை நிதி உதவி வழங்கினார். அவரைத் தொடர்ந்து நடிகர் சூர்யா, ஜோதிகா, கார்த்தி ஆகிய மூவரும் இணைந்து 50 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளனர்.