நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் நடிப்பின் நாயகன் என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். அந்த வகையில் இவருக்கு இந்திய அளவில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவரது நடிப்பில் வெளியான நந்தா, காக்க காக்க, வாரணம் ஆயிரம், அயன் போன்ற பல படங்கள் மிகப்பெரிய வெற்றி படங்களாகும். இருப்பினும் சமீப காலமாக இவரது நடிப்பில் வெளியாகும் சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. அந்த வகையில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான கங்குவா திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. அதைத்தொடர்ந்து ரெட்ரோ திரைப்படம் வெளியானது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரூ. 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. அடுத்தது ரசிகர்கள் பலரும் சூர்யாவின் 45 வது படத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். தற்காலிகமாக சூர்யா 45 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்குகிறார்.
படத்தில் சூர்யாவுடன் இணைந்து திரிஷா, நட்டி நடராஜ், யோகி பாபு, சுவாசிகா மற்றும் பலர் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ நிறைவடைந்த நிலையில் இன்னும் சில நாட்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைய இருக்கிறது. இதற்கிடையில் இந்த படத்திற்கு வேட்டை கருப்பு என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. இது தவிர இந்த படத்தை இந்த ஆண்டு தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியானது.
ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் இட்லி கடை திரைப்படம் 2025 அக்டோபர் 1ஆம் தேதி திரைக்கு வரவில்லை என்றால் அந்த தேதியில் சூர்யா 45 படத்தை கொண்டுவர படக்குழு திட்டமிட்டு வருவதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும் அக்டோபர் 1 இல் எந்த படம் திரைக்கு வரும்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- Advertisement -