கங்குவா படம் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா, கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர தயாராகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கியிருக்கும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்துள்ளார். வெற்றி பழனிசாமி இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் டீசர், ட்ரெய்லர், பாடல்கள் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அதேசமயம் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அப்போது கேரளாவில் நடந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூர்யா, (இன்று) நவம்பர் 7ல் பிறந்தநாள் கொண்டாடும் உலக நாயகன் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், “நான் சினிமாவில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மரியாதைக்குரிய அவரை அண்ணா என்று கூப்பிடுவதா சித்தப்பா என்று கூப்பிடுவதா என்று தெரியவில்லை. அவர் எனக்கு எப்போதுமே இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார். சினிமாவில் இருக்கின்ற 20 கிராஃப்ட் அவருக்கு தெரியும். எட்டு மொழிகள் அவருக்கு தெரியும். 2008 ஆம் ஆண்டு வாரணம் ஆயிரம் படம் பண்ணிட்டு கமல் சாரிடம் இரண்டு லுக், சிக்ஸ் பேக் என்று பெருமையாக காட்டினேன். ஆனால் அவர் அந்த சமயத்தில் தசாவதாரம் படம் பண்ணிக் கொண்டிருந்தார். அவர் என்னிடம் 10 லுக்கை காட்டினார். அவர் இப்போது ஏஐ படிப்பதற்காக சென்றிருக்கிறார். இப்பொழுதும் கற்றுக் கொண்டிருக்கிறார். நீங்கள் ஒரு கலையை தொழிலை விரும்பினால் அதற்கு நீங்கள் எஜமானராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் கலை மற்றும் ஆர்வத்திற்கு அடிமையாக இருக்க வேண்டும். அதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு மதிப்பிற்குரிய உலகநாயகன் கமல்ஹாசன் சார். அவருக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.