சூர்யா பாலிவுட்டில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் ‘கங்குவா‘ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார்.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பிலும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையிலும் இப்படம் உருவாகி வருகிறது. 3D அனிமேஷனாக உருவாகி வரும் இந்த படம் பத்து மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் தற்போது சூர்யா பாலிவுட்டில் மீண்டும் என்ட்ரி கொடுக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கு முன் ராம்கோபால் வர்மாவின் ரத்த சரித்திரம் படத்தில் இந்தியில் நடித்திருந்தார்.
ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் உருவாக இருக்கும் கர்ணா படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.
இதற்கிடையில் சூர்யா, வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதால் ‘வாடிவாசல்’ தொடங்க சற்று தாமதம் ஆகும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில் ‘சூர்யா சூரரைப் போற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் மற்றொரு புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.