ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள கடைசி உலகப் போர் படத்தின் சுதந்திர சுவாசம் பாடல் வெளியாகி உள்ளது.
ஹிப் ஹாப் ஆதி தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருகிறார். அதே சமயம் நடிப்பிலும் ஆர்வமுடைய இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்தும் வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவர் மீசைய முறுக்கு என்ற திரைப்படத்தை இயக்கி நடித்திருந்த நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி கண்டது. அடுத்ததாக இவரது இயக்கத்தில் கடைசி உலகப் போர் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை ஹிப் ஹாப் ஆதி தயாரித்து, இயக்கி, நடித்து, இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஹிப் ஹாப் ஆதியுடன் இணைந்து அனகா, நட்டி நடராஜ், நாசர், ஹரிஷ் உத்தமன், அழகன் பெருமாள், முனீஸ் காந்த், சிங்கம் புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போர் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதன்படி படமானது 2024 செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், கிளிம்ப்ஸ், முதல் பாடல் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 15) இந்திய நாட்டின் 78வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் கடைசி உலகப் போர் படத்திலிருந்து சுதந்திர சுவாசம் எனும் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் பாடல் வரிகளை ஹிப் ஹாப் தமிழா எழுதி இருக்கும் நிலையில் கரிஷ்மா ரவிச்சந்திரன், கௌஷிக் கிருஷ் மற்றும் ஹிப்ஹாப் தமிழா ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.