துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன் ஆகிய படங்களில் நடித்த ஆரம்பகட்டத்தில் “இந்த ஒல்லிக்குச்சி ஆளெல்லாம் ஒரு ஹீரோவா?” என்று கலாய்ப்புக்கு ஆளானவர் நடிகர் தனுஷ். ஆனால் தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை எல்லாம் அடித்து நொறுக்கி அசுர நடிப்பால் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கிக் கொண்டார். ஒவ்வொரு படத்திலும் தன்னை நடிப்பில் மெருகேற்றிக் கொண்டே இருக்கிறார். அந்த வரிசையில் அடுத்ததாக வரும் பொங்கலுக்கு இவருடைய நடிப்பில் “கேப்டன் மில்லர்” திரைப்படம் வெளியாக உள்ளது.1940 காலகட்டத்தில் நடைபெறும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் தனுஷ் உடன் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், சந்தீப் கிஷன், பிரியங்கா அருள் மோகன் ஆகியோரும் நடிக்கின்றனர். சாணிக்காயிதம், ராக்கி படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று (ஜனவரி 3) சென்னையில் நடைபெற்றது. அப்போது விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த இயக்குனர் மாரி செல்வராஜ் மேடையில் தன்னுடைய அடுத்த படத்தைப் பற்றிய அப்டேட்டைக் கூறியுள்ளார். கர்ணன் என்ற மாபெரும் வெற்றிப் படத்திற்கு பின்னர் மாரி செல்வராஜ் மற்றும் தனுஷ் இருவரும் இந்தப் படத்திற்காக இணைய உள்ளனர்.இப்படமானது கர்ணன் படத்தை விடவும் அதிக பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் மாரி செல்வராஜ் தற்போது மும்முரமாக இறங்கி உள்ளதாக கூறியுள்ளார்.
90 காலகட்டத்தில் கொடியங்குளம் பகுதியில் தலித் மக்கள் போலீசாரால் பட்ட துன்பத்தை கர்ணன் படத்தில் மிக ஸ்ட்ராங்காக பேசியிருந்தனர் மாரி செல்வராஜ் மற்றும் தனுஷ். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியிலும் படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. இந்தக் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரியதாகவே உள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த மாமன்னன் திரைப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. பொதுவாகவே ஏதேனும் ஒரு உண்மைச் சம்பவத்தை தழுவி தான் மாரிசெல்வராஜின் படங்கள் இருக்கும். அந்த வகையில் அடுத்ததாக உருவாக உள்ள படத்தில் அவர் எந்த பிரச்சினையைக் கையில் எடுப்பார் எனவும் இப்போதே யோசிக்கத் தொடங்கி விட்டனர் ரசிகர்கள். எனவே அடுத்தடுத்த படங்களில் பெரிய, ஸ்ட்ராங்கான கன்டென்ட்டுடன் கூடிய வெற்றியைக் குறி வைத்துள்ளார் மாரி செல்வராஜ்.
- Advertisement -


