பழம்பெரும் நடிகை லீலாவதி காலமானார். இவர் 86 வயது நிரம்பியவர்.
கன்னட சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் லீலாவதி. இவர் கன்னடம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு போன்ற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். 50 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் பணியாற்றிய இவர் கிட்டத்தட்ட 600 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் நான் அவன் இல்லை, அவள் ஒரு தொடர்கதை போன்ற படங்களில் நடித்துள்ளார். சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். டாக்டர் ராஜ்குமார் வாழ்நாள் சாதனையாளர் விருது, சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருது போன்ற விருதுகளை வென்றுள்ளார்.
பெங்களூருக்கு அருகிலுள்ள சோலதேவனஹல்லியை சேர்ந்த மலைப்பகுதியில் தன் மகனுடன் வாழ்ந்து வந்த இவர் உடல் நலக் குறைவால் கடந்த பல வருடங்களாக படுத்த படுக்கையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக அவரின் உடல்நிலை மோசமான காரணத்தால் சிகிச்சை பலன் இன்றி நேற்று உயிரிழந்தார். நடிகை லீலாவதியின் மறைவிற்கு திரையுலகினர் தங்களின் ஆறுதல்களையும் இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.
லீலாவதியின் மகன் வினோத் ராஜூவும் ஒரு நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.