“லியோ’ படக்குழு” சென்னையில் செட் அமைக்கிறது
காஷ்மீரில் இருந்து 24ம் தேதி, சென்னை திரும்பும் நடிகர் விஜயின் ‘லியோ’ படக்குழு சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்க, அதற்காக செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மாஸ்டர் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அனிருத் கூட்டணியில் இரண்டாவது முறையாக ‘லியோ’ திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். மேலும் அர்ஜுன், சஞ்சய்தத், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி படத்திற்கான பூஜை போடப்பட்டு, ப்ரோமோ காட்சிகளும் படமாக்கப்பட்டன. அந்த மாதமே நடிகர் விஜய்யை வைத்து படத்திற்கான ப்ரோமோ காட்சிகளும் படமாக்கப்பட்ட நிலையில், அந்த காட்சிகள் மற்றும் அனிருத்தின் பின்னணி இசையோடு ‘லியோ’ படத்தின் ப்ரோமோவையும் வெளியிட்டது படக்குழு. மேலும் இத்திரைப்படம் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது என்றும் படக்குழு அறிவித்திருந்தது.

முதற்கட்ட படப்பிடிப்பு ஜனவரி முதல் வாரத்தில் சென்னையிலும், அதே மாதத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலிலும் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இதில் மேலும் இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், நடிகர் சஞ்சய் தத் ஆகியோரின் கதாபாத்திர காட்சிகள் படமாக்கப்பட்டன. இன்னும் 4 நாட்களில் காஷ்மீர் படப்பிடிப்பை முடித்து வரும் 24-ம் தேதி படக்குழு சென்னை திரும்புவதாக தகவல் கிடைத்துள்ளது.
சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்க, அதற்காக செட் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பிட்ட தேதியில் படத்தை வெளியிட, முன்கூட்டியே திட்டமிட்டு, படப்பிடிப்பு பணியில் ஆயத்தமாக செயல்பட்டு வருகிறது லியோ படக்குழு.