சூர்யா 46 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என அப்டேட் கிடைத்துள்ளது
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வலம் வரும் சூர்யா கடைசியாக ரெட்ரோ திரைப்படத்தில் நடித்திருந்தார். அதேசமயம் இவரது நடிப்பில் தற்காலிகமாக சூர்யா 45 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ முடிவடைந்ததாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் சூர்யா, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இது தவிர இவர், வாத்தி, லக்கி பாஸ்கர் படத்தின் இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனது 46வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என சமீப காலமாக பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதனை சூர்யாவும், ரெட்ரோ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அறிவித்திருந்தார். அதன்படி சித்தாரா என்டேர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் தயாராக உள்ள இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து மமிதா பைஜு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இன்று (மே 19) இந்த படத்தின் பூஜை ஐதராபாத்தில் நடைபெறும் எனவும், இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் எனவும் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் நாகவம்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நாங்கள் சஞ்சய் ராமசாமியை மீண்டும் கொண்டு வருவோம்” என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றினை வெளியிட்டு இருந்தார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.