பாலாவின் வணங்கான் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இயக்குனர் பாலா தனித்துவமான படங்களை இயக்குவதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவரது இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் தான் வணங்கான். இந்த படத்தில் அருண் விஜய் உடன் இணைந்து ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின் என பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஜி வி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இருப்பினும் ஜிவி பிரகாஷ் பல படங்களில் பிசியாக பணியாற்றி வருவதால் வணங்கான் திரைப்படத்தின் பின்னணி இசை தொடர்பான பணிகளை சாம் சி எஸ் கவனிக்கிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே வணங்கான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அதைத்தொடர்ந்து டீசர், ட்ரெய்லர் என அடுத்தடுத்து வெளியாகி படத்தின் எதிர்பார்ப்பை தூண்டியது மட்டுமல்லாமல் இணையத்தில் வைரலாகி வந்தது. அடுத்ததாக இந்த படம் ஜூலையில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் கடும் போட்டிகள் இருந்ததால் வணங்கான் படத்தின் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தணிக்கை குழு, வணங்கான் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாக அருண் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் இப்படமானது 2024 செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. எனவே ரிலீஸ் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.