மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் 29ஆம் தேதி வெளியான திரைப்படம் மாமன்னன். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாஸில், ரவீனா ரவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைத்திருந்தார் மற்றும் தேனி ஈஸ்வர் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார்.
சமூக நீதி மற்றும் சமத்துவம் சார்ந்த உண்மைகளை மிகத் தெளிவாக கூறியுள்ள திரைப்படம் தான் மாமன்னன். அரசியலில் சாதி ஒடுக்கு முறைகள் குறித்து மாரி செல்வராஜ் ஸ்டைலில் மிகவும் துணிச்சலான முறையில் சொல்லப்பட்ட இந்த மாமன்னன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்றது.
இதைத்தொடர்ந்து கடந்த ஜூலை 27 இல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்ட இப்படம் ட்ரெண்டிங்கில் நம்பர் 1 ஆக இருந்தது.
இந்நிலையில் மாமன்னன் திரைப்படம் வெளியாகி 50வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “மாமன்னன் திரைப்படம் வெற்றிகரமான 50 ஆவது நாளில் அடியெடுத்து வைக்கிறது. சமூகநீதி – சமத்துவ அரசியலை பேசிய மாமன்னன் திரைப்படத்தின் வெற்றியை சாத்தியமாக்கிய உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு என் அன்பும், நன்றியும்” என்று பதிவிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின், மாமன்னன் திரைப்படத்தின் 50-வது நாள் வெற்றி விழாவை படக்குழுவினருடன் மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார். அந்த விழாவில், மாமன்னன் திரைப்படம் வெற்றிக்காக உழைத்த படக்குழுவினர், தொழில்நுட்பக் கலைஞர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் விருதுகள் வழங்கி மகிழ்ந்ததாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.