spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஉதயநிதி ஸ்டாலின், வடிவேலு கூட்டணியின் 'மாமன்னன்' திரை விமர்சனம்!

உதயநிதி ஸ்டாலின், வடிவேலு கூட்டணியின் ‘மாமன்னன்’ திரை விமர்சனம்!

-

- Advertisement -

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்,வடிவேலு, பகத் பாஸில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகியுள்ள மாமன்னன் திரைப்படத்தின் விமர்சனம்.

ஏற்றத்தாழ்வு மிகுந்த சமூகத்தில் சொல்லப்பட வேண்டிய, சொல்வதற்கு சற்று சிக்கலான சம தர்ம சூத்திரத்தை கையில் எடுத்து அதை தன் பாணியிலேயே படமாக்கி இருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

we-r-hiring

வன்முறையே விரும்பாத தந்தையாக வடிவேலு “மாமன்னன்” என்னும் கதாபாத்திரத்திலும், அடிமுறை என்னும் தற்காப்பு கலை பயிற்றுவிக்கும் இளைஞனாக, வடிவேலுவின் மகனாக நடித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
புறந்தள்ளப்பட்ட சமூகத்தில் இருந்து அதிகாரத்தை கையில் எடுத்திருக்கும் எம்.எல்.ஏ.வாக வடிவேலு நடித்திருக்கிறார். அவரது கட்சியிலேயே உயர் வகுப்பைச் சார்ந்த பகத் பாசில் தன் தந்தையைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர் பதவியில் இருக்கிறார்.
தன்னைவிட கீழானவர்களிடம் தோற்றுவிடக்கூடாது என்ற முனைப்போடு திரியும் பகத் பாஸில் வடிவேலு வையும் தனக்கு கீழ் நிலையில் இருக்கும்படி வைத்துக் கொள்ள நினைக்கிறார்.

அரசியலில் ஆதிக்க வர்க்கத்தினர் எப்படி ஒடுக்கப்பட்டவர்களிடமிருந்து உரிமைகளை பறிக்க எண்ணுகிறார்கள் என்பதை சுற்றி கதைக்களம் நகர்கிறது. பகத் பாசிலின் அண்ணனாக நடித்திருக்கும் சுனில் ரெட்டி, கம்யூனிஸ்டு சித்தாந்தத்தை பரப்பிக் கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷின் கோச்சிங் சென்டரை அடித்து நொறுக்குவதால் ஏற்படும் பிரச்சனை அரசியல் பிரச்சினையாக உருவெடுக்கிறது. அதன் பின்னர் நடைபெறும் ஆதிக்க வர்க்கத்துக்கும் உரிமைகளை தக்க வைத்துக் கொள்ள போராடும் மக்களுக்கும் இடையே நடக்கும் சம்பவங்கள் தான் மீதி கதை. ஒரு சிறிய பிரச்சனை எவ்வாறு பெரிய பிரச்சினையாக உருவெடுக்கிறது என்பதை தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் நேர்த்தியாக காட்டி வருகிறார் மாரி செல்வராஜ். இப்படமும் அதே ரகம் தான். கதை நடைபெறும் களமாக சேலம் மாவட்டத்தை தேர்ந்தெடுத்துள்ளனர்.

படத்தின் முதல் பாதி மெதுவாக நகர்வது போல் இருந்தாலும் எங்குமே தொய்வடையும்படியான காட்சி அமைப்புகள் இல்லாமல் அமைந்தது படத்திற்கு பக்கபலம். ஒரு கூஸ்பம்பான இடைவெளி காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்கிறது. ஆனால் அதைத்தொடர்ந்து வந்த இரண்டாம் பாதியில் அங்கங்கு பல இடங்களில் தொய்வுகள் ஏராளம். இரண்டாம் பாதியில் வரும் கார் காட்சி படத்தில் ஹைலைட்டான விஷயங்களில் ஒன்று.

அதைத் தவிர வழக்கமான அரசியல் மோதல், தேர்தல் களம் ,யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்பது போலவே ஒரு சாதாரண அரசியல் படம் பார்த்த உணர்வை தான் கொடுத்தது.

படம் முழுவதுமே ஏகப்பட்ட இடங்களில் பாடல்கள் திரைக்கதை மேலும் மெதுவாக நகர்வது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. படத்தில் மாமன்னனாக நடித்துள்ள வடிவேலு அமைதியை விரும்பும் போதும், ஆக்ரோஷமாக மாறும்போதும் தன்னுடைய நேர்த்தியான நடிப்பால் ஸ்கோர் செய்கிறார்.

பார்வையிலேயே மிரளச் செய்யும் நடிப்பு அசுரன் பகத் பாசில் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிக நேர்த்தியாக நடித்துள்ளார். கம்யூனிஸ்ட் ஆக வரும் கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரம் இன்னும் சற்று ஸ்ட்ராங்காக வடிவமைக்கப்பட்டிருக்கலாம். உதயநிதி ஸ்டாலினும் தன்னுடைய முந்தைய படங்களிலிருந்து மாறுபட்ட நடிப்பை கொடுத்துள்ளார்.

தேனி ஈஸ்வரனின் ஒளிப்பதிவு கதைக்களங்களை அதன் உண்மைத் தன்மையும் எதார்த்தமும் மாறாமல் படம் பிடித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் காட்சிகளில் இருக்கும் வலிகளை பின்னணி இசை மூலமாக ரசிகர்களுக்கு கடத்துகிறார்.

இவை அனைத்திற்கும் ஹைலைட்டாக மின்னுகின்றன படத்தின் வசனங்கள். நிறைய வசனங்கள் ரசிகர்களின் கைதட்டல்களைப் பெறுகின்றன. இரண்டாம் பாதியில் ஏற்படும் தொய்வுகளை சரி செய்யும் விதமாக ஒரு கிளைமாக்ஸ். இவ்வாறாக மாரி செல்வராஜ் உரிமை போராட்டத்தை திரை வடிவமாக பிரதிபலித்துள்ளார். ஆதிக்க வர்க்கத்தின் அரசியல் அதிகாரம் எளிய மக்களை எவ்வாறு நடத்துகிறது என்பதை மீண்டும் பதிவு செய்து ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.

MUST READ