உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் படத்தின் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வருக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் திரைப்படம் கடந்த ஜூன் 29ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்தை பரியேறும் பெருமாள் கர்ணன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து வடிவேலு கீர்த்தி சுரேஷ் பகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்த நிலையில் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார்.
அரசியலில் சாதிய ஒடுக்குமுறை குறித்து பேசப்பட்ட இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமூக நீதி மற்றும் சமத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்றத்தாழ்வு மிகுந்த சமூகத்தில் சொல்லப்பட வேண்டிய கருத்துக்களை மிகத் தெளிவாகவும் மிக நுணுக்கமாகவும் எடுத்துக் கூறியுள்ளது. மேலும் தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு கதைக்களங்களை அதன் உண்மை தன்மையையும் எதார்த்தமும் மாறாமல் படம் பிடித்துள்ளது ஏ ஆர் ரகுமான் காட்சிகளில் இருக்கும் வழிகளை பின்னணி இசை மூலமாக ரசிகர்களுக்கு கடத்திருக்கிறார்.

இவ்வாறாக இப்படம் பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.
இந்நிலையில் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த தேனி ஈஸ்வருக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று நன்றி தெரிவித்துள்ளார்.
அது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் “மாமன்னன் திரைப்படம் மக்களின் மனங்களை வெல்ல தேனி ஈஸ்வர் சாரின் ஒளிப்பதிவு மிக முக்கிய காரணம். வெவ்வேறு மனிதர்கள், அவர்களின் வாழ்விடம் – அரசியல் சாதிய முரண்கள் – பிராணிகள் – மலைகள் என ஒவ்வொரு காட்சிக்கும் உயிரூட்டி மாமன்னனை மாபெரும் வெற்றி படைப்பாக தூக்கி நிறுத்திய தேனி ஈஸ்வர் அவர்களை சந்தித்து என் அன்பையும் நன்றியையும் தெரிவித்தேன்” என்று பதிவிட்டுள்ளார்.