வடிவேலு, பகத் பாசில் நடிக்கும் மாரீசன் படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, நடிகர் பகத் பாசில் வில்லனாக நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து கீர்த்தி சுரேஷும் நடித்திருந்தார். இந்த படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். சாதிய ஒடுக்குமுறை குறித்து பேசப்பட்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் மாமன்னாக நடித்திருந்த வடிவேலுவின் கதாபாத்திரமும் ரத்ன வேலின் நடித்திருந்த பகத் பாசிலின் கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில் வடிவேலு மற்றும் பகத் பாசில் ஆகியோரின் கூட்டணியில் புதிய படம் உருவாகி வருவதாகவும் அந்த படத்திற்கு மாரீசன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளிவந்தன. அதன்படி இந்த படத்தினை ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்க யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்ட நிலையில் முதற்கட்ட படப்பிடிப்புகள் சமீபத்தில் நிறைவடைந்ததாக சொல்லப்படுகிறது. அடுத்தது இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு நேற்று (அக்டோபர் 24) சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த படமானது அடுத்த ஆண்டின் இரண்டாம் பாதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.