விதார்த் பட இயக்குனர் காலமானார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு விதார்த் நடிப்பில் ஒரு கிடாயின் கருணை மனு எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் விதாரத்துடன் இணைந்து ரவீனா ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். புதிதாக திருமணம் முடிந்த கதாநாயகனுடன் இணைந்து ஊர் மக்கள் தங்களின் குலதெய்வ கோயிலுக்காக கிடா ஒன்றை பலி கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்த வண்டி பிடித்து செல்கின்றனர். அப்போது செய்யாத கொலை ஒன்றை செய்ததாக நினைத்து அதை மறைக்கப் போராடுகின்றனர். அதன் மூலம் அந்த கிடா உயிர் தப்புகிறது. இதுதான் ஒரு கிடாயின் கருணை மனு என்பதன் கதை. இந்த படத்தினை இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து சுரேஷ் சங்கையா, பிரேம்ஜி நடிப்பில் சத்திய சோதனை எனும் திரைப்படத்தையும் இயக்கியிருந்தார். காமெடி கலந்த கதை களத்தில் உருவாகியிருந்த இந்த படமும் வெற்றி பெற்றது. இவ்வாறு அடுத்தடுத்த வித்தியாசமான படங்களை தந்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சுரேஷ் சங்கையா. அடுத்தது இவர் யோகி பாபு நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்குவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் அதே சமயம் அவரது கல்லீரலும் செயலிழந்து உயிரிழந்துள்ளார். இவருடைய மறைவு செய்தி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.