நடிகர் விஜய் ஜனநாயகன் படப்பிடிப்பை நிறைவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் வெளியானது. அதை தொடர்ந்து விஜய், தனது 69 வது படமான ஜனநாயகன் திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். தற்போது அரசியல்வாதியாக வலம் வரும் விஜயின் கடைசி படம் இது என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அரசியல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தை ஹெச். வினோத் இயக்குகிறார். கே வி என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். படத்தில் விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரகாஷ்ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, நரேன் மற்றும் பலர் நடிக்கின்றனர். விஜய்யின் கடைசி படமாக இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் திரைக்கு வர தயாராகி வருகிறது. அதன்படி ஏற்கனவே படப்பிடிப்புகள் தொடங்கி, இறுதிக் கட்டத்தை நெருங்கி இருக்கிறது. அதன்படி நேற்று (ஜூன் 2) நடிகர் விஜய் ஜனநாயக படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார் என தகவல் வெளியாகியிருக்கின்றன. அது மட்டும் இல்லாமல் படப்பிடிப்பின் இறுதி நாளில் பணியாற்றிய அனைவருக்கும் அசைவ விருந்து பரிமாறப்பட்டதாக சொல்லப்படுகிறது. அடுத்தது ஜனநாயகன் படப்பிடிப்பை நிறைவு செய்த விஜய், முழு நேர அரசியலில் ஈடுபட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.