நடிகர் விஜய் சேதுபதி, பிக் பாஸில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். சில கமிட்மெண்ட்கள் காரணமாக அவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலக, அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி களத்தில் இறங்கினார். அந்த வகையில் பிக் பாஸ் 8வது சீசன் முழுவதையும் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய நிலையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் 9வது சீசனையும் அவர்தான் தொகுத்து வழங்கி வருகிறார்.
அதேசமயம் அவர் ஏகப்பட்ட படங்களில் கமிட் ஆகி வருகிறார். எனவே விஜய் சேதுபதியும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் அடுத்த ஹோஸ்ட் யாராக இருக்கும்? என்று பலரும் சமூக வலைதளங்களில் விவாதிக்க தொடங்கிவிட்டனர்.

விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக ‘தலைவன் தலைவி’ திரைப்படம் வெளியான நிலையில் அடுத்தது ‘ட்ரெயின்’ திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இவர், பாலாஜி தரணிதரன், பூரி ஜெகன்நாத் ஆகியோரின் இயக்கத்தில் தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இது தவிர மணிகண்டன் இயக்கத்தில் ‘முத்து என்கிற காட்டான்’ என்ற வெப் சீரிஸிலும் கவனம் செலுத்துகிறார். மேலும் கிருத்திகா உதயநிதி, மகிழ் திருமேனி ஆகியோரின் இயக்கத்தில் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சமூக வலைதளங்களில் பல தகவல்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.


