வீர தீர சூரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விக்ரம் பேசியுள்ளார்.
விக்ரம் நடிப்பில் கடைசியாக தங்கலான் திரைப்படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வசூலில் சரிவை சந்தித்தது. இதைத்தொடர்ந்து விக்ரம், சேதுபதி, சித்தா ஆகிய படங்களின் இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள இந்த படத்தினை ஹெச். ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் துஷாரா விஜயன், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். வருகின்ற மார்ச் 27ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வரும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (மார்ச் 20) சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவில் விக்ரம், அருண்குமார், துஷாரா, சுராஜ், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய விக்ரம், வீர தீர சூரன் படம் குறித்த சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதன்படி அவர், “சித்தா படம் பார்த்த பிறகு அருண்குமாரை நான் பெயர் சொல்லி அழைத்தது இல்லை. சித்தா என்று தான் அழைப்பேன். அந்த படம் அந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியது. அவருடைய படங்களில் ஏதோ ஒரு விஷயத்தை செய்கிறார்.
அவருடைய அனைத்து படங்களும் எனக்கு பிடிக்கும். என்னுடைய ரசிகர்கள் நான் வேற மாதிரி படம் பண்ண வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். நானும் அதற்காகத்தான் காத்திருந்தேன். அதுபோன்ற ஒரு படம் தான் வீர தீர சூரன். இந்த படம் சேதுபதி மாதிரி ரகளையாகவும் சித்தா மாதிரி எமோஷனலாகவும் இருக்கும். வீர தீர சூரன் ரசிகர்களுக்கான படம்” என்று தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து விக்ரம், “எஸ் ஜே சூர்யா தொடர்ந்து படப்பிடிப்பில் இருந்து கொண்டு தூங்காமல் இன்று வந்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு வீர தீர சூரன் படத்தின் டப்பிங் பண்ண போகிறார். ஓய்வு இல்லாமல் அவர் ஓடிக்கொண்டே இருக்கிறார்” என்று சொன்னதும் எஸ்.ஜே. சூர்யா மேடைக்கு ஓடி வந்து விக்ரமை கட்டி அணைத்து, “விக்ரம், விக்ரமாகவே இன்னும் பலவிதமான படங்களில் நடிக்க வேண்டும். தூள் படத்தில் நான் பார்த்த விக்ரமை இந்த படத்தில் அருண்குமார் வேற விதமாக காட்டியிருக்கிறார். அனைவருக்கும் இந்த படம் பிடிக்கும்” என்றார் எஸ்.ஜே. சூர்யா.