நடிகர் விஷால் கடைசியாக ஹரி இயக்கத்தில் வெளியான ரத்னம் திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆக்சன் நிறைந்த கதைக்களத்தில் வெளியான இப்படம் விஷாலுக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. அதைத்தொடர்ந்து விஷால் துப்பறிவாளன் 2 திரைப்படத்தை இயக்க திட்டமிட்டிருந்த நிலையில் படமானது ஒரு சில காரணங்களால் கைவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் நடிகர் விஷால், சுந்தர் சி இயக்கத்தில் மதகஜராஜா எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை ஜெமினி பிலிம் நிறுவனம் தயாரிக்க விஜய் ஆண்டனி இதன் இசையமைக்கும் பணிகளை கவனித்திருந்தார். இந்த படத்தில் விஷாலுடன் இணைந்து சந்தானம், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 11 வருடங்களுக்கு முன்பாகவே நிறைவடைந்து ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டது. ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் படமானது ரிலீஸாகாமல் நீண்ட வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படம் குறித்த புதிய தகவல் வெளியானது. அதன்படி இந்த படம் 2024 செப்டம்பர் மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் மதகஜராஜா திரைப்படம் 2024 செப்டம்பர் 5ஆம் தேதி விஜயின் கோட் திரைப்படத்திற்கு போட்டியாக களமிறங்க இருக்கிறது என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் படக்குழுவினர் சார்பில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
பொதுவாக விஷால் எந்த ஒரு விஷயம் செய்தாலுமே அது விஜய்க்கு போட்டியாக இருக்கிறது என சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருவார்கள். இந்நிலையில் கோட் படம் வெளியாகும் அதே நாளில் மதகஜராஜா திரைப்படம் வெளியாக இருப்பது விஷால் ரசிகர்களுக்கு குட் நியூஸ் ஆக இருந்தாலும் இந்த தகவல் விஜய் ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.