ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தள்ளிப்போனதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜயின் 69 வது படமாக உருவாகி வரும் திரைப்படம் தான் ஜனநாயகன். விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், மமிதா பைஜூ ஆகியோரின் நடிப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேசமயம் இன்னும் மூன்று வாரங்களுக்குள் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் எனவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான விஜயின் கடைசி படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இந்த படத்தை திருவிழா போல் கொண்டாடி தீர்த்துவிட வேண்டும் என ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி ஏற்கனவே வெளியான இரண்டு போஸ்டர்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அடுத்தது இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் போது இப்படம் 2025 அக்டோபர் மாதத்தில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் ஆகும் என நேற்று (மார்ச் 24) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதாவது விஜய் நடிப்பில் உருவாகியிருந்த பல படங்கள் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகி வெற்றியடைந்ததால் ஜனநாயகன் படத்தையும் பொங்கலுக்கு வெளியிடுவதாக ஒரு பக்கம் சொல்லப்படுகிறது. மற்றொரு பக்கம், ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமை இன்னும் விற்கப்படவில்லையாம். அதாவது பெரிய படங்களை அதிக விலைக்கு வாங்கும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் இந்த வருடத்திற்கான படங்களின் பட்டியலை அறிவித்துவிட்டது. ஆகையினால் ஜனநாயகன் படத்தை அடுத்த வருடம் செய்தால் மட்டுமே படத்தை வாங்கிக் கொள்வதாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் கூறிவிட்டதாகவும் இதன் காரணமாக தான் ஜனநாயகன் திரைப்படம் 2026 பொங்கலுக்கு தள்ளிப்போனது எனவும் கூறி வருகிறார்கள்.