டெல்லியில் உள்ள விடுதிகளில் பாலியல் தொழிலுக்காக பெண்களை கேட்டு விற்பனை செய்து வந்த ஒரு கும்பலை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில், மூளையாக செயல்பட்டவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். வெளிநாட்டுப் பெண்கள் உட்பட மொத்தம் 23 சிறுமிகளும் மீட்கப்பட்டுள்ளனர். இதை மத்திய துணை ஆணையர் எம்.ஹர்ஷ் வர்தன் உறுதிப்படுத்தியுள்ளார்.
மாவட்டத்தின் பஹர்கஞ்ச் காவல் நிலையத்தின் ஷ்ரத்தானந்த் மார்க் காவல் நிலையம், ஹிம்மத் கர் காவல் நிலையத்தின் கூட்டுக் குழுவால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார். மீட்கப்பட்ட சிறுமிகளில், 3 மைனர் சிறுமிகளும் அடங்குவர். அவர்களிடம் இருந்து 7 மொபைல்கள் மற்றும் 2 ஸ்கூட்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த தொழிலை, புரோக்கர்கள் திட்டமிடப்பட்ட ஒரு அமைப்பாக உருவாக்கி உள்ளனர். புரோக்கர்கள் பெண்களை 5 முதல் 10 நிமிடங்கள்கூட அனுப்பி வைத்துள்ளனர். அதற்கு ஈடாக, வாடிக்கையாளரிடம் இருந்து ரூ.700 முதல் ரூ.10,000 வரை பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. அவர்களை வாடிக்கையாளர்களிடம் இறக்கி, ஏற்றிவர பல டெலிவரி பாய்ஸ்களையும் வேலைக்கு அமர்த்தியுள்ளனர். அவர்கள் தங்கள் ஸ்கூட்டர், பைக்குகளுடன் ஹோட்டல்கள், வீடுகளுக்கு வெளியே தயாராக இருப்பார்கள். வாடிக்கையாளரின் ஆர்டரின் பேரில், அவர்கள் 10 நிமிடங்களுக்குள் அந்தப் பெண்ணை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று, பின்னர் மீண்டும் தங்களது இடத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.
விசாரணையில், பஹர்கஞ்சில் உள்ள ஹோட்டல்களுக்கு ஆன்-டிமாண்ட் ஆர்டர்களின் பேரில் சிறுமிகள் அனுப்பப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. கார்களை வாடகைக்கு விடுவதைப்போல இந்தத் தொழிலை அதே முறையில் நடத்தப்பட்டுள்ளது. எங்கெல்லாம் தேவை இருக்கிறதோ அங்கெல்லாம் சிறுமிகள் ஸ்கூட்டரில் அந்த ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
பஹர்கஞ்சில் உள்ள சில ஹோட்டல்கள், வீடுகளில் சிறுமிகள் வலுக்கட்டாயமாக தங்கவைக்கப்பட்டு பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக டி.சி.பி. தெரிவித்தார். மேற்கு வங்கம், நேபாளம், டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்து இதற்காக சிறுமிகளை அழைத்து வந்துள்ளனர். அவர்கள் பஹர்கஞ்ச் மெயின் பஜாரில் உள்ள ஒரு வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்தத் தகவலின் அடிப்படையில், புறக்காவல் நிலையப் பொறுப்பாளர் கிரண் சேதி, சப்-இன்ஸ்பெக்டர் வருண், தலைமைக் காவலர் சஞ்சய், விகாஸ் பூனியா உள்ளிட்டோர் அடங்கிய குழு சோதனை நடத்தியது. இதில், 23 சிறுமிகள் மீட்கப்பட்டனர், அவர்களில் 3 பேர் மைனர்கள். இதில் ஒரு உஸ்பெக் பெண்ணும் அடங்குவார்.
தகவல் கிடைத்த பிறகு, ஒரு போலி வாடிக்கையாளரை உருவாக்கி அனுப்பினார்கள். அது உறுதி செய்யப்பட்டவுடன், போலீஸ் குழு இரவில் தாமதமாக சோதனை செய்து, அவர்கள் தப்பிக்க வாய்ப்பளிக்கவில்லை. இதில் தொடர்புடைய பல புரோக்கர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். மீட்கப்பட்ட 23 சிறுமிகளில் 10 பேர் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் வங்காளம் மற்றும் டெல்லியின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ஏழு குற்றவாளிகள் நூர்சாத் ஆலம், ராகுல் ஆலம், அப்துல், முகமது தௌசிப், சமீம், முகமது ஜருல் மோனிஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் பீகாரில் உள்ள கிஷன்கஞ்ச், மேற்கு வங்காளத்தின் தினாஜ்பூர், டெல்லியின் கமலா சந்தைப் பகுதியில் வசிப்பவர்கள். விசாரணையில், இந்த மோசடியை நிஜாம் மற்றும் ரெஹான் என்ற இருவர் நடத்தி வந்ததாகவும், அவர்கள் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும் போலீசார் கூறுகின்றனர். அவர்களை தேடும் பணியில் போலீசார் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.