காய்கறி ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருவதாக கூறி போலி ரசீதுகள் தயாரித்து 1 கோடியே 46 லட்சம் மோசடி செய்த புகாரில் குடியாத்தத்தை சேர்ந்த 3 பேர் கைது.
ஹரியானாவை சேர்ந்த மொத்த காய்கறி விற்பனை செய்யும் தனியார் நிறுவனத்தில் இணைந்து தொழில் செய்து பின்னர் போலி ரசீது மூலம் மூலம் 1 கோடியே 46 லட்சம் வரை மோசடி செய்த குடியாத்தம் பகுதியை சேர்ந்த சீதாராமன், சரவணன், சத்தீஷ்குமார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள வசந்தகுமார், சரண்ராஜை தேடி வருகின்றனர்.
அரியானா மாநிலம் குரு நகரை சேர்ந்தவர் ரவிகாந்லட்சுமண ராவ். இவர் ஆன்லைன் மூலம் காய்கறி பழங்கள் வர்த்தகம் செய்யும் தனியார் நிறுவனத்தின் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

இவரிடம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் செதுக்கரை கிராமத்தை சேர்ந்த சீதாராம் (வயது 32) என்பவர் தான் காய்கறிகள் ஏற்றுமதி செய்யும் ஏஜெண்டாக உள்ளேன் என்று அறிமுகம் செய்து கொண்டார்.
இதையடுத்து ரூ.70 லட்சத்திற்கு வியாபாரம் செய்தார். அதற்கான பணத்தையும் திருப்பி செலுத்தினார். தொடர்ந்து ரூ.1 கோடி 80 லட்சத்திற்கு பணம் பெற்று வியாபாரம் செய்துள்ளார்.
ஆனால், அதற்கான பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். தொடர்ந்து தனியார் நிறுவன மேலாளர் பணம் கேட்டு வந்தால் ரூபாய். 70 லட்சம் மட்டும் திரும்ப கொடுத்துள்ளார்.
தனியார் நிறுவனத்திடம் பெற்ற பணத்தை தனது நண்பர்களான குடியாத்தம் சீவூர் கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார்(28), அகரம்சேரி கிராமத்தை சேர்ந்த சரவணன்(26), குடியாத்தத்தை சேர்ந்த வசந்தகுமார்(26) ஆகியோரது வங்கி கணக்குக்கு அனுப்பியுள்ளார்.
தொடர்ந்து தனியார் நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டிய ரூபாய் 1 கோடியே 10 லட்சத்திற்கு செலுத்தியதாக சீதாராம் போலி ஆவணங்கள் தயாரித்து உள்ளார்.

இதையடுத்து, நண்பர்கள் 3 பேரின் வங்கி கணக்கில் இருந்த பணத்தை சீதாராம் தனது மனைவி விஜிதாவின் வங்கி கணக்கிற்கு மாற்றி உள்ளார்.
பணத்தை பெற்றுக் கொண்ட சீதாராம் ஆடம்பர கார், வேன் வாங்கினார். மேலும் அகரம்சேரியில் நிலம் வாங்கி வீடு கட்டினார்.
இதேபோல் அந்த தனியார் நிறுவனத்தில் ஏஜெண்டாக உள்ள திருவண்ணாமலையை சேர்ந்த சரண்ராஜ் என்பவர் ரூபாய் 36 லட்சம் செலுத்த வேண்டி இருந்தது. அதற்கும் சீதாராம் போலி ரசீது தயாரித்து பணத்தை நிறுவனத்திற்கு கொடுக்காமல் செலவு செய்துள்ளார். இதற்கு சரண்ராஜ் உடந்தையாக இருந்துள்ளார்.
நிறுவனத்திற்கு சேர வேண்டிய பணம் வராததால் நிறுவனத்தினர் சோதனை செய்தனர். அப்போது போலி ஆவணங்கள் தயாரித்து சீதாராம் மோசடி செய்தது தெரியவந்தது.
தொடர்ந்து, இதுகுறித்து ரவிகாந்த் லட்சுமணராவ் வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் புகார் செய்தார். வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து பண மோசடி செய்த சீதாராம் அவருக்கு உடந்தையாக இருந்த சத்தீஷ்குமார், சரவணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான வசந்தகுமார், சரண்ராஜ் ஆகியோரை தேடி வருகின்றனர்.

மோசடி செய்த பணத்தில் ஆடம்பரமாக செலவு செய்த சீதாராம் தனது மனைவியின் பிரசவத்திற்காக வாங்கிய வேனை அடமானம் வைத்து சிகிச்சைக்கு பணம் அனுப்பி உள்ளார்.
இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த சீதாராமின் மனைவியும் இதில் ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு பிரசவம் நடைபெற்றுள்ளது. எனவே அவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கையில் போலீசார் தீவிரம் காட்டியுள்ளனர்.
