பெங்களுருவில் பப்பிற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த மர்மநபர் 50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களுரூ மல்லேஸ்வரம் 17-வது கிராஸ் பகுதியில் ஜாமெட்ரி புருவரி அண்ட் கிட்சன் என்கிற பப் செயல்பட்டு வருகிறது. இந்த பப்புக்குள் நேற்று அதிகாலை 4 மணி அளவில் துப்பாக்கியுடன் மர்மநபர் ஒருவர் நுழைந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து பப் காவலர்கள் கட்டிடத்தை கேட்டுகளை பூட்டி விட்டு உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் பெங்களுரு நகர வடக்கு வடக்குப் பிரிவு துணை காவல் ஆணையர் சைதுலு அதாவத் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கட்டிடத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மர்மநபர் தப்பிச்சென்றது தெரியவந்தது. மேலும் பப்பின் 3-வது தளத்தில் இருந்து பப் அலுவலகத்திற்குள் நுழைந்து, அங்கிருந்த பணப்பெட்டியை உடைத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை திருடிச் சென்றதும் தெரியவந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து சுப்பிரமணியா நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கொள்ளை நடைபெற்ற பப்பில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டனர். மேலும் சம்பவம் குறித்து பப் காவலாளிகளிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் கொள்ளையன் பப்பின் பின் பக்க கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்ததும், பின்னர் அலுவலகத்தில் இருந்த பணப் பெட்டியை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும் போலீசாரிடம் சிக்காமல் இருக்காமல் இருப்பதற்காக கொள்ளையன் பப்பில் இருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்து சேதப்படுத்திச் சென்றதும் தெரியவந்தது. இதனை அடுத்து, தப்பியோடிய கொள்ளையனை தீவிரமாக தேடி வருகின்றனர்.