கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் தர்ஷன் இருக்கும் காவல் நிலையத்திற்கு முன்பு நூற்றுக்கணக்கான தர்ஷன் ரசிகர்கள் கூடி முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரசிகர்களை களைந்து செல்ல காவல்துறை தடியடி நடத்தினர்.
ரேணுகா சுவாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் அவரது காதலி பவித்ரா கவுடா உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் ஆறு நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி நேற்று உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் பெங்களூர் நகரில் உள்ள அன்ன பூர்ணேஸ்வரி காவல் நிலையத்தில் 13 குற்றவாளிகளையும் வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று காலை நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்ட நேரம் முதல் தற்பொழுது வரை அவர் இருக்கும் காவல் நிலையத்திற்கு முன்பாக அவரது ரசிகர்கள் நூற்றுக்கணக்கானோர் கூடியுள்ளனர். தொடர்ச்சியாக தர்ஷனுக்கு ஆதரவாக அவர்கள் அவ்வப்போது முழக்கங்களையும் எழுப்பி வருகின்றனர். தொடர்ந்து ரசிகர்கள் காவல் நிலையத்திற்கு முன்பு கூடி வந்ததால் அந்த சாலை முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நடிகர் தர்ஷன் – காதலி பவித்ரா கௌடா கைது (apcnewstamil.com)
இன்று மதியம் ரசிகர்களின் கூட்டம் அளவு கடந்து கூடியதை அடுத்து காவல்துறையினர் அவர்கள் மீது தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். இதனால் சிறிது நேரம் காவல் நிலையத்திற்கு முன்பு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. தடியடி நடத்திய பிறகு காவல்துறையினர் ரசிகர்களை கலைத்து சாலையில் போக்குவரத்தை சீர் செய்தனர்.